அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு – சதோச ஊடாக விலைகுறைத்து விற்பனை

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம் சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துவரும் மாதங்களில் சர்வதேச சந்தை விலைகளை கருத்திலெடுக்காமல் ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசியை அரசாங்கத்தின் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், சதோசவினால் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான அரிசிகளினதும் விலைகளை குறைத்து அந்த விலைகளை இன்றை தினம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வாகனங்கள் மூலம் தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறும் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

வர்த்தக மற்றும் விவசாய அமைச்சு அலுவலர்கள் அடங்கிய குழு வாராந்தம் கூடி அத்தியாவசிய உணவு பொருட்களின் அளவு மற்றும் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *