இலஞ்சம் பெற்ற இருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை

இலஞ்சம் பெற்ற இருவருக்கு தலா 10 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்.

காணியொன்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 5,000 ரூபா இலஞ்சம் கோரினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளான இருவரும், அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு கையெழுத்து இடுவதற்காக 10,000 ரூபா இலஞ்சம் கோரி 5,000 பெற இணங்கி பணத்தைப் பெற்றுள்ளனர்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதயன்று, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, முதலாவது சந்தேகநபரின் மேசையில் இரண்டாயிரம் ரூபா தாள்கள் இரண்டும் இரண்டாவது சந்தேகநபரிடம் ஆயிரம் ரூபா தாளும் இருந்துள்ளது.

இருவரும் இலஞ்சம் பெற்றமை சந்தேகத்துக்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், முதலாவது குற்றவாளிக்கு இரண்டு குற்றங்களுக்காக, 10 வருட கடூழியச் சிறைதண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதித்ததுடன், கட்டத்தவறின் இரண்டுவருட சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், இரண்டாவது குற்றவாளிக்கு நான்கு குற்றங்களுக்காக, குற்றமொன்றுக்கு 5 வருட கடூழியச் சிறைதண்டனை விதித்ததுடன், 10 வருட கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததுடன், 5,000 ரூபா அபராதமும் கட்டத்தவறின் 1 வருடசிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *